ஹிருணிகாவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு மீளப்பெறப்பட்டது

ஹிருணிகாவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு மீளப்பெறப்பட்டது

ஹிருணிகாவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு மீளப்பெறப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2021 | 5:52 pm

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு மன்றுக்கு வருகை தராதமையினால் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சிறிது நேரத்தில் அவர் மன்றுக்கு வருகை தந்ததமையால் பிடியாணை உத்தரவு மீளப்பெறப்பட்டது.

2015 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திர மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதனையடுத்து, அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எனினும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் தமது சட்டத்தரணியுடன் அவர் மன்றில் முன்னிலையானமையினால், பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு மீளப்பெறப்பட்டது.

இதனிடையே, ஒன்றரை மாதக் குழந்தையின் தாயான தமது தரப்பைச் சேர்ந்த ஹிருணிகா, இன்று முற்பகல் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்ததாக அவரது சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரால் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைய முடியாததால், இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும், இனிவரும் காலங்களில் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவாரெனவும் ஹிருணிகா தரப்பு சட்டத்தரணி உறுதியளித்துள்ளார்.

இதற்கமைய, பிரதிவாதியான ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, அவரை முன்பிணையில் செல்ல அனுமதித்தார்.

குறிப்பிட்ட நேரத்திற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதியால் எச்சரிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்