போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு ஜ.நா வலியுறுத்தல்

மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்பு; போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு ஜ.நா வலியுறுத்தல்

by Staff Writer 09-03-2021 | 8:01 AM
Colombo (News 1st) மியன்மாரில் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாதுகாப்பாக விடுதலை செய்யப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. நேற்றிலிருந்து சுமார் 200 போராட்டக்காரர்கள், யங்கூனிலுள்ள மாவட்டமொன்றின் தொடர்மாடி கட்டடத் தொகுதியொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்கள் தடுப்பிலிருந்து வௌியேற அனுமதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. உச்சபட்ச கடப்பாட்டுடன் செயற்படுமாறு மியன்மார் இராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரோனியோ கட்டரஸ், கைதுகள் வன்முறைகள் எவையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பாக விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில் அமைதியாக பேரணி சென்றவர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென பிரித்தானிய தூதரகமும் வலியுறுத்தியுள்ளது. கடந்த மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட மியன்மார் இராணுவத்தினரின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டங்கள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டுத் தாக்குதல்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கிரனைட் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.