சீனி வரி மோசடியால் 15.6 பில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு

by Staff Writer 09-03-2021 | 3:06 PM
Colombo (News 1st) சீனி வரி மோசடியினால் நாட்டிற்கு 15.6 பில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்று பாராளுமன்றத்தில் அரச நிதி தெரிவுக்குழுவிற்கு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இழக்கப்பட்ட நிதியில் முழுத்தொகையை அல்லது ஒரு பகுதியை இறக்குமதி செய்த சில நிறுவனங்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச நிதி தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தௌிவுபடுத்தினார். சீனி 50 ரூபாவில் இருந்து 25 சதமாக குறைக்கப்பட்டாலும் எதிர்பார்க்கப்பட்ட அனுகூலம் மக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார். ஒரு சில வர்த்தகர்கள் மாத்திரம் சந்தையை வழிநடத்தும் போக்கு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். சீனி வரிக்குறைப்பு காரணமாக 15.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.