கண்காணிக்கப்படுவதாக சந்தேகம்- கனேடிய உயர்ஸ்தானிகர்

தாம் கண்காணிக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதென இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

by Staff Writer 08-03-2021 | 2:23 PM
Colombo (News 1st) தாம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். தமது வீட்டுக்கு முன்பாக ஊடகங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் தமது தனிப்பட்ட சந்திப்புகள் தொடர்பில் எவ்வாறு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கனேடிய இல்லத்தில் கனேடிய உயர்ஸ்தானிகரை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்தித்தமை தொடர்பாக இரண்டு பத்திரிகைகள் அண்மையில் செய்தி வௌியிட்டிருந்தன. இதனைத் தவிர இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தென் கொரிய தூதுவர் ஆகியோருடனான சந்திப்புக்கள் தொடர்பிலான தகவல்களும் ஊடகங்களில் வௌியாகியிருந்தன. பங்களாதேஷ் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி, பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, இராஜதந்திர அதிகாரிகள் கண்காணிக்கப்படுவதில்லை என தெரிவித்தார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் கண்காணிக்கப்படுவதாக வௌியாகும் தகவல்களை நிராகரிப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.