நாடளாவிய ரீதியில் ‘கறுப்பு ஞாயிறு’ அனுஷ்டிப்பு

நாடளாவிய ரீதியில் ‘கறுப்பு ஞாயிறு’ அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2021 | 2:53 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க ​தேவாலயங்களில் இன்று (07) கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் கத்தோலிக்க தேவாலயங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இன்றைய தினம் கறுப்பு ஞாயிறு தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு விசுவாசிகள் அனைவரும் கறுப்பு நிற ஆடையுடன் திருப்பலிகளில் கலந்துகொண்டனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தாக்குதலின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ளவே இந்த ஆணைக்குழுவின் மூலம் நாம் எதிர்பார்த்தோம். எனினும் அது தொடர்பில் ஆணைக்குழு எந்தளவிற்கு செயற்பட்டுள்ளது என்பது எமக்குத் தெரியாது. ஆகவே ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையமற்றது என்பதால் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சேகரித்து தாக்குதலை உண்மையாக வழிநடத்தியவர்கள் யார் என்பதை வௌிக்கொணரவே நாம் முயற்சிக்கின்றோம். ஏனெனில் மக்கள் இதனையே எதிர்பார்க்கின்றனர்

என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதன்போது தெரிவித்தார்.

நீர்கொழும்பு கிரைஸ்ட் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற ஆராதனைகளை தொடர்ந்து, தேவாலய முன்றலில் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதி கோரி மக்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை வௌியிட்டிருந்தனர்.

மாத்தளை புனித தோமையார் தேவாலயத்தில் இன்று விஷேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது,

இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அன்னை மரியாள் உருவச்சிலை முன்றலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்கவேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு தேவாலயங்களில் இன்று அமைதியான மு​றையில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன.

யாழ். இளவாழை புனித யாகப்பர் தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையைத் தொடர்ந்து இரணைதீவில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.​

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டி டயகம புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

வழிபாட்டுக்கு வருகை தந்திருந்தவர்களின் அதிகமானவர்கள் கறுப்பு ஆடைகள் அணிந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறன்று இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய அனைத்து கிறிஸ்தவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்