நீதியை நிலைநாட்டுவதை இலங்கை தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது: அஹிம்சா விக்ரமதுங்க

by Staff Writer 06-03-2021 | 9:07 PM
Colombo (News 1st) தனது தந்தை கொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், நீதியை நிலைநாட்டுவதை இலங்கை தலைவர்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருவதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க அமெரிக்காவின் The Washington Post பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆம் திகதி The Washington Post பத்திரிகை வௌியிட்ட அஹிம்சா விக்ரமதுங்கவின் கட்டுரையில், லசந்த விக்ரமதுங்கவின் கொலை, அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பில் ஆழமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தனது தந்தை, Anna Politkovskaya, ஜமால் கஸோக்ஜி ஆகியோரின் கொலைகளைப் பார்க்கும் போது ஊடகவியலாளர்களை படுகொலை செய்வது உலகில் அதிகரித்து வரும் சர்வாதிகாரத்தின் மற்றுமொரு விம்பமெனத் தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார். Sunday Leader பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி காலை தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது அத்திட்டிய பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை பின்தொடர்ந்து, கொலை செய்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும், கொலை செய்யப்பட முன்னர், தனது காரிலிருந்த குறிப்பு புத்தகத்தில் தன்னை பின்தொடரும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை, லசந்த விக்ரமதுங்க எழுதியிருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்தது. இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களுக்கு பின்னர் சர்ச்சைக்குரிய மேலும் சில சம்பவங்கள் பதிவாகின. 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் கடத்தப்பட்ட இரண்டு இளைஞர்களின் தீக்கிரையாக்கப்பட்ட சடலங்கள் அநுராதபுரம் கம்மிரிஸ் கஸ்வெவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர், லசந்த விக்மரதுங்கவை கொலை செய்வதற்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளொன்று அத்திட்டிய சதுப்பு நிலமொன்றிலிருந்து மீட்கப்பட்டது. விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் லசந்த விக்ரமதுங்கவின் சாரதியும் கடத்திச் செல்லப்பட்டதுடன், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். கல்கிசை பொலிஸார், முதலில் கிடைத்த தகவல்களின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்தாலும் அது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது தென்படவில்லை. அதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களம் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பிலான விடயங்களை வௌிப்படுத்தி வந்த வேளையில், அந்த விசாரணை திடீரென பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு மாற்றப்பட்டது. தொலைபேசி தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு ஏற்ப, இந்த கொலை தொடர்பில் 2010 ஆம் ஆண்டு ஜேசுதாசன் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர் விளக்கமறியலில் இருக்கும் போதே 2012 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். எனினும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, ஆட்சி மாற்றம் இடம்பெறும் வரை லசந்த விக்மரதுங்கவின் கொலையுடன் தொடர்புபட்டதாக எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு இந்த விசாரணை மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி, அவ்வேளையில் அதன் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசேரா மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா ஆகியோர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தனர். அடக்கம் செய்யப்பட்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் உடல் 2016 செப்டம்பர் மாதம் தடயவியல் விசாரணைகளுக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. இது துப்பாக்கிச்சூட்டினால் மேற்கொள்ளப்பட்ட கொலை அல்லவென தடயவியல் விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்டது. 2016 - 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, ஊடகவியலாளர்களான உபாலி தென்னகோன், கீத் நொயார் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவிற்கும் இந்த கொலையை மேற்கொண்டவர்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக விசாரணைக்குழு வௌிப்படுத்தியது. உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் பின்னர் விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் என பெயரிடப்பட்டிருந்தார். லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட காலத்தில், புலனாய்வு பிரிவின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகக் கூறப்படும் கொழும்பு திரிபோலி எனப்படும் முகாமில் பணியாற்றிய சில உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளையும் தொடர்புபடுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் இராணுவத்தின் சிலரும் இந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டாலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் உரிய சந்தேகநபர்கள் இதுவரை பெயரிடப்படவில்லை. இந்நிலையில், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கல்கிசை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அவ்வேளையில் அந்த பிரதேசத்திற்கு பொறுப்பாகவிருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த அதிகாரிகளும் தற்போது பி​ணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்கவின் கொலைச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 3 அதிகாரிகள் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். ஷானி அபேசேகர தற்போது விளக்கமறியிலில் உள்ளதுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர திசேராவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வௌிநாட்டு அரசியல் தஞ்சம் கோரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா நாட்டிலிருந்து தப்பிச்சென்றார். லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தமக்கு தொடர்ந்தும் நீதி கிடைக்காத நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்சலெட்டிற்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவித்தததாக அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். 12 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை இன்னும் மர்மமாகவே உள்ளது.