இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் இந்தியா வெற்றி

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் இந்தியா வெற்றி

by Bella Dalima 06-03-2021 | 7:22 PM
Colombo (News 1st) இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் இந்தியா வெற்றியீட்டியது. முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய இந்தியாவின் ஆரம்ப விக்கட்கள் சீரான இடைவௌியில் வீழ்த்தப்பட்டன. 146 ஓட்டங்களுக்கு 6 விக்கட்கள் இழக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் இணைந்து துடுப்பெடுத்தாடிய ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றனர். ரிஷப் பந்த் 101 ஓட்டங்களையும் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களையும் குவித்தனர். பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கட்களையும் ஜேம்ஸ் அன்டர்ஸன் 3 விக்கட்களையும் வீழ்த்தினர். 160 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்து தோல்வியடைந்தது. டேன் லோரன்ஸ் 50 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஜோ ரூட் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 5 விக்கட்களை வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக சதம் கடந்த ரிஷப் பந்த் தெரிவானார். இந்த வெற்றியைத் தொடர்ந்து தொடர் 3-1 என இந்தியா வசமானது. அத்துடன் சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பை இந்தியா உறுதிப்படுத்திக்கொண்டது. தொடரின் நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவானார்.