மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு விசாரணை

மேய்ச்சல் தரை வழக்கு: மேல் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தீர்மானிக்க முடியும் - நீதிபதி அறிவிப்பு

by Staff Writer 05-03-2021 | 8:09 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை விவகார வழக்கு மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி M.N.அப்துல்லாஹ் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில், 13 மற்றும் 14 ஆம் பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை சமர்ப்பித்தனர். 3 ஆம் மற்றும் 12 ஆம் பிரதிவாதிகள் மன்றில் ஆஜராகாத நிலையில், சட்ட மா அதிபர் சார்பில் அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் ஆஜராகினார். இந்த மேய்ச்சல் தரை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்று நடைபெற்று வருவதாகவும், அதன் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், இந்த வழக்கைக் கொண்டு செல்ல முடியும் எனவும் அரச தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். தமது உயர் நியாயாதிக்கமான மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கொன்று நடைபெறுவதால், இது குறித்து எதுவித கட்டளையையும் பிறப்பிக்க முடியாது என மட்டக்களப்பு நீதிபதி M.N.அப்துல்லாஹ் தெரிவித்தார். இந்த மேய்ச்சல் தரையில் பண்ணையாளர்களின் மூன்று மாடுகள் காயப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 60 மாடுகள் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் மன்றின் கவனத்திற்குக்கொண்டு வந்தனர். இந்த விடயம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என நீதிபதி கூறினார். இதற்கமைய, ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மயிலத்தமடுவில் பண்ணையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கோரி, கடந்த ஜனவரி 9 ஆம் திகதி மட்டக்களப்பு சித்தாண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேருக்கு எதிராக, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பொது விதிகள் சட்டத்தின் கீழ், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஏறாவூர் பொலிஸார் தாக்கல் செய்திருந்த வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்குடன் தொடர்புடைய 8 பேர் இன்று மன்றில் ஆஜரான நிலையில், இன்று ஆஜராகதவர்களுக்கு எதிராக, பதில் நீதவான் A.L.முனாப் பிடியாணை பிறப்பித்ததுடன், குறித்த வழக்கு ஜீன் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.