கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டி

கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டி வௌியீடு

by Staff Writer 04-03-2021 | 2:29 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது. COVID - 19 சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் அதி விசேட வர்த்தமானி கடந்த 25 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயத்தின் வழிகாட்டல்களுக்கு அமையவே அவை இடம்பெறும் என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால், அனைத்து மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளுக்குமாக குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தயார்ப்படுத்தல் மற்றும் போக்குவரத்திற்கான அனுமதி, போக்குவரத்திற்கு முன்னரான நடைமுறை, சடலத்தின் போக்குவரத்து என 3 பிரிவுகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், * கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணிக்கும் நிலையில் எவ்வித தாமதமுமின்றி அவரது உறவினர்களுக்கு உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் * வைத்தியசாலையின் பணிப்பாளர் அல்லது அதன் பிரதானியினால், அடக்கம் செய்வது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை உறவினரிடமிருந்து பெறப்பட வேண்டும் * சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பிரதிநிதி ஒருவரை தொடர்புகொண்டு இறப்பு அத்தாட்சிப் படிவத்தில், அடக்கம் செய்யப்படும் இடத்தை குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் * சடலத்தை வைத்தியசாலையிலிருந்து கொண்டு செல்லவும் முறையாக அடக்கம் செய்யவும் இந்த குறித்த ஆவணம் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. * உறவினர்கள் முன்கூட்டியே ஒரு சவப்பெட்டியை வழங்க வேண்டும் * சடலத்தை கொண்டு செல்ல முன்னர், தனிப்பட்ட பாதுகாப்பு அங்கி அணிந்த வைத்தியசாலையினால் நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து உறவினர்கள் பார்வையிடுவதற்காக அந்த பகுதிக்கு சடலத்தைக் கொண்டு வர வேண்டும் * சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கிய வழிகாட்டல்களின்படி, இக் கட்டத்தில் மாத்திரமே மத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன * சடலத்தை கொண்டு செல்லும் வாகனத்தின் சாரதி மற்றும் அவர்களுடன் செல்பவர்கள் அனைவரும் பொருத்தமான தனிநபர் பாதுகாப்பு அங்கியை அணிய வேண்டும் * உரிய சுகாதார நிறுவனம், உறவினர்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத நபர்களால் நிழற்படங்கள், காணொளி மற்றும் வீடியோ அழைப்புகளை எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது * கொரோனா மரணம் நிகழ்ந்த வைத்தியசாலைக்கு சென்று, இறந்தவரை அடையாளம் கண்ட உறவினர்களில் இருவர், இரணைதீவில் அடக்கம் செய்யப்படுவதை பார்வையிடுவதற்காக மறுநாள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குடா கப்பலில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர் * ஆயினும், குறித்த நபர்கள் COVID - 19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக இருக்கக்கூடாது * அடக்கம் செய்ய, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியுடன் இரண்டு உறவினர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளனர் * சவப்பெட்டி திறக்கப்படக்கூடாது என்பதுடன், உறவினர்கள் / நெருங்கிய உறவினர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் சவப்பெட்டியை கையாள அனுமதிக்கப்படமாட்டார்கள் ஆகிய விடயங்கள் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. வழிகாட்டியை பார்ப்பதற்கு...