13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் பயனில்லை: வௌிவிவவார அமைச்சின் செயலாளர்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் பயனில்லை: வௌிவிவவார அமைச்சின் செயலாளர்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2021 | 9:00 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை இந்தியா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும், இலங்கை 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ஆனாலும், 13 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு எந்தவொரு இலாபமும் கிடைக்கவில்லை என ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு கடந்த வார இறுதியில் அளித்த பேட்டியில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்திருந்தார்.

மோதலின் இறுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யவும், விசேடமாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவுள்ள மாகாணங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிரும் அரசியலமைப்பு சான்றிதழை வழங்குவதுமே 13 ஆவது திருத்தம் மூலமான எதிர்பார்ப்பாகவுள்ளது.

எவ்வாறாயினும், அந்த எதுவுமே நடைபெறவில்லை என பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

உங்களுடையது சமஷ்டி ஆட்சிக்குரியது. அதிகாரப் பகிர்வு, பொலிஸ் – காணி அதிகாரத்தை கோரும் போது நீங்கள் தனியாட்சி கோருவதாகவே தெளிவாகும். இந்தியா 1987 ஆம் ஆண்டில் இருந்த நிலைப்பாட்டிலேயே இனிமேலும் இருக்கக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு. ஏனென்றால், தற்போது காலம் மாறியுள்ளது

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தயார் நிலை தொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்து மாகாண சபைகள் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் இன்று வினவினர்.

ஜூன் மாதத்தில் தேர்தல் இடம்பெறும் என பத்திரிகையில் அவதானித்ததாகவும், யார் அதனைக் கூறியது என தமக்கு தெரியாது எனவும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்