கொரோனாவால் மரணிப்போரை இரணைதீவில் அடக்கம் செய்வதை எதிர்த்து கிராம வாசிகள் ஆர்ப்பாட்டம் 

by Staff Writer 03-03-2021 | 11:05 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக கிளிநொச்சி - இரணைதீவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர் சங்கங்கள், பொது அமைப்புகள், அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார். இரணைதீவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்மையால் மக்கள் குடியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். எனினும், 111 குடும்பங்களை சேர்ந்த 341 பேர் இரணைதீவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். 350 குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் மீள்குடியேறாது, இரணைமாதா நகரில் தங்கியுள்ளனர். இந்நிலையில் , கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தால் தாம் பாதிப்புகளை எதிர்நோக்கக்கூடும் என மக்கள் குறிப்பிட்டனர். இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முதலில் இரணைதீவில் இதனை ஆரம்பித்தாலும் புத்தளம், ஓட்டமாவடி மற்றும் மன்னார் உள்ளிட்ட ஆறு பகுதிகள் அதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இரணைதீவில் அடக்கம் செய்வது தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய இடங்களில் அதற்கு சந்தர்ப்பம் அளிப்பது தொடர்பில் தற்போது ஆய்வுகள் இடம்பெறுகின்றன.