சாகர் மந்தன் திட்டத்தை ஆரம்பித்தது இந்தியா

இந்து சமுத்திர நடவடிக்கைகளை விரிவுபடுத்தி சாகர் மந்தன் திட்டத்தை ஆரம்பித்தது இந்தியா

by Staff Writer 03-03-2021 | 7:52 PM
Colombo (News 1st) இந்தியா தமது சமுத்திர செயற்பாடுகளை விஸ்தரித்து, 'சாகர் மந்தன்' என்ற பெயரில் வணிக போக்குவரத்து கண்காணிப்பு மத்திய நிலையத்தை ஆரம்பித்துள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று (02) நடைபெற்ற இந்திய சமுத்திர மாநாட்டில் இதனைக் கூறினார். இந்த நிலையத்தின் மூலம் கடல் மார்க்கங்களின் பாதுகாப்பும் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்படுவதாக மோடி குறிப்பிட்டார். சாகர் மாலா என்ற அபிவிருத்தி திட்டம் 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 2015 ஆம் ஆண்டில் இருந்து 2035 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 574 திட்டங்கள் 82 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிறைவு செய்யப்படவுள்ளன. Bimstec மற்றும் IOR நாடுகளுக்கு இடையில் பொருளாதார செயற்பாடுகளை பலப்படுத்தும் எதிர்பார்ப்பில் அடிப்படை வசதிகள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு 2026 ஆம் ஆண்டு இணக்கப்பாடுகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் மோடி கூறினார். வணிக போக்குவரத்து கண்காணிப்பு மத்திய நிலையத்தை இந்தியா ஒரு பக்கம் ஆரம்பிக்கும் நிலையில், மறுபுறம் இலங்கை, மாலைத்தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளுக்கான முத்தரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசனை செயலகம் அண்மையில் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது. சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தை எதிர்கொள்வதற்கு இந்தியா 'சாகர் மாலா' என்ற பெயரில் தமது நாட்டை சுற்றியுள்ள பல துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகிறது. புதிய வணிக போக்குவரத்து கண்காணிப்பு மத்திய நிலையம் ஊடாக வலய வர்த்தக மற்றும் கப்பல் போக்குவரத்து சேவையை விஸ்தரிக்கவும் இந்தியா எதிர்பார்த்துள்ளது. இந்த பின்புலத்திலேயே கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.