சம்பளத்தை 1,000 ஆக அதிகரிக்கும் தீர்மானம் உறுதி

நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி 

by Staff Writer 02-03-2021 | 8:53 AM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான பிரேரணை சம்பள நிர்ணய சபையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபை நேற்று (01) கூடி கலந்துரையாடிய போதே இந்த விடயம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான வர்த்தமானியை ஒரு வாரத்திற்குள் வௌியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 1,000 ரூபா வரையான சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனை குறித்து ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கடந்த 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த காலப்பகுதியில் முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து 197 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். கிடைத்த ஆட்சேபனைகளை ஆராய்ந்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான இறுதி தீர்மானத்தை சம்பள நிர்ணய சபையின் தலைவரான தொழில் அமைச்சருக்கு அறிவிக்கப்படவுள்ளது. தொழில் அமைச்சரினால் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் வௌியிடப்பட்டதன் பின்னரே 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.