சட்டத்தரணிகள் நால்வர் பிரதம நீதியரசரிடம் முறையீடு 

சட்டத்தரணிகள் நால்வர் பிரதம நீதியரசரிடம் முறையீடு 

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2021 | 2:01 pm

Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரைகள் மூலம் உயர் நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக விசாரணை நடத்துமாறு கோரி 4 சட்டத்தரணிகள், பிரதம நீதியரசரிடம் இன்று (01) எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.

2015 ஜனவரி 8ஆம் திகதி தொடக்கம் 2019 நவம்பர் 19 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம், நீதிக்கு குந்தகம் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதா என்பது குறித்தும் நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் பிரஜைகளின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் கவனம் செலுத்துமாறு முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேனக பெரேரா, அச்சலா செனெவிரத்ன, நாமல் ராஜபக்ஸ, தம்பையா ஜெயரத்னராஜா ஆகிய 4 சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றப் பதிவாளர் ஊடாக முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 2157 / 44ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி மூலம், நீதிமன்றம் அல்லது நீதிமன்ற வழக்கு தொடர்பில் ஒருபோதும் அதிகாரம் வழங்கப்படவில்லை என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துமிந்த சில்வாவிற்கு அரசியல் அநீதி இழைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அவர் சமர்ப்பித்த மேன்முறையீடு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீண்டும் ஆராய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டதன் மூலம், நீதிமன்றத்திற்கு அவதூறு ஏற்பட்டுள்ளதா என ஆராயுமாறும் சட்டத்தரணிகள் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்