யாழ். மாநகர சபை முதல்வர் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

by Staff Writer 28-02-2021 | 7:47 PM
Colombo (News 1st) இந்திய அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள கலாசார மத்திய நிலையத்தை பொறுப்பேற்று நிர்வகிப்பதற்கு யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளது. இந்த கட்டடத் தொகுதிக்கான 67 பேர் கொண்ட ஆளணியை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். 900 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான இந்த கலாசார மண்டபத்திற்கான நிர்மாணப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது யாழ். விஜயத்தின் போது 2015 மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார். இந்த கலாசார மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ள நிலையில், இதனை விரைவில் திறந்து வைக்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரே இந்தியப் பிரதமர் என்ற கௌரவம் தனக்குண்டு எனவும் யாழில் விரைவில் திறக்கப்படவுள்ள கலாசார நிலையத்தை இந்தியா அமைத்துக் கொடுத்துள்ளது என்பதை கூறுவதில் பெருமை அடைவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார். இந்த கலாசார மத்திய நிலையத்தை யாழ். மாநகர சபை பொறுப்பேற்று நிர்வகிக்கும் என யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கூறியுள்ளார்.
கொழும்பிலே இருக்கின்ற தாமரைத் தடாக கட்டடத்தை முப்படையினர் இணைந்து தான் நிர்வகிக்கின்றனர். அவர்களுடைய பொறுப்பிலே இந்த பண்பாட்டு மையத்தை ஒப்படைத்து அவர்களை இந்திய ஒப்பந்தக்காரரிடம் பயிற்சிக்கு அனுப்பி அவர்கள் மூலம் இயக்கலாம் என்ற ஒரு நிலைப்பாடும் ஒரு சிலரால் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ். மாநகர சபை அத்தகைய முயற்சிகளை வரவேற்காது அல்லது விரும்பாது
என யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். கலாசார மத்திய நிலையத்திற்கான ஆளணி மற்றும் பதவி நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
யாழ். பண்பாட்டு மையத்தை திறப்பதற்கான பணிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அந்த கட்டடத் தொகுதியை இயக்குகின்ற அலுவலர்களை உத்தியோகபூர்வமாக நியமிக்க வேண்டும். மத்திய அரசாங்கம் அந்த பதவி நிலைகளை அங்கிகரிக்கின்ற போது தான் அந்தப் பதவிகளுக்குரிய தகுதியானவர்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு 67 பேரை நாங்கள் உடனடியாக நியமிக்க வேண்டும். அதற்குரிய ஒழுங்குகளை செய்து தருமாறு நாங்கள் மத்திய அரசாங்கத்தை வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்
என யாழ். மாநகர சபை இதன்போது கோரியுள்ளார்.