10,000 கடற்றொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு படகில் சென்று மீனவர் பிரச்சினையை தீர்க்கப் போவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

by Staff Writer 27-02-2021 | 8:33 PM
Colombo (News 1st) 10,000 வட மாகாண கடற்றொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு படகில் சென்று, மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் சிந்தித்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவில் மீனவர்களை சந்தித்த போதே அமைச்சர் இதனைக் கூறினார். முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் மீனவர்கள் உள்ளிட்ட தரப்பினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது, அத்துமீறலுக்கும் சட்டவிரோதத் தொழில்களுக்கும் இடம் கொடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். 10 வருடங்களுக்கு முன்னர் தெரிவித்ததை அவர் மீண்டும் நினைவுகூர்ந்தார். 10,000 கடற்றொழிலாளர்களுடன் படகில் இந்தியாவிற்கு சென்று, அங்கிருக்கும் கடற்றொழிலாளர்கள், ஆட்சியாளர்களுன் கலந்துரையாடும் தனது திட்டத்தை அரசியல் சூழல் காரணமாக செய்ய முடியாமற்போனதாகக் குறிப்பிட்டார். எனினும், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அதனைச் செய்ய யோசிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.