கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபா

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபாவை பெறும் வாய்ப்புள்ளது: டக்ளஸ் தேவானந்தா

by Staff Writer 27-02-2021 | 5:40 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில்சார் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வற்கு சுமார் 100 மில்லியன் ரூபாவை பயன்படுத்த முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர், மாவட்டத்தின் பல்வேறு சமூக அமைப்புக்களையும் சந்தித்து நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். கடற்றொழிலாளர்களுக்கு கௌரவமான வாழ்கைத் தரத்தினை ஏற்படுத்துவதற்கு நிறைவான வருமான மார்க்கங்களை அதிகரிக்க வேண்டும் என இதன்போது அமைச்சர் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு புலம்பெயர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் தொழில்சார் அபிருத்தி செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடியவாறு சுமார் 100 மில்லியன் ரூபாவை கொடையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இன்று மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது இங்கு வெளிமாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தமது பிரதேசத்தில் மீன்பிடிக்க வருவது தொடர்பான பிரச்சினைகள் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகளால் விளக்கமாக விபரிக்கப்பட்டது. முல்லைத்தீவு - கொக்கிளாய் கடல் நீரேரியில் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.