ஜமால் கஷோக்ஜியை கொலை செய்ய அனுமதி வழங்கிய இளவரசர்

ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு அனுமதி வழங்கிய சவுதி இளவரசர்: அமெரிக்க புலனாய்வுப் பிரிவு வௌிக்கொணர்வு

by Bella Dalima 27-02-2021 | 3:05 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு சவுதி முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் அனுமதி வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. சவுதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கஷோக்ஜி, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்திற்கு சென்றிருந்த போது காணாமற்போயிருந்தார். அவர் துணைத்தூதரகத்திற்குள் கொலை செய்யப்பட்டதை 18 நாட்களின் பின்னர் சவுதி அரேபியா ஒப்புக்கொண்டிருந்தது. இந்த நிலையில், அவருடைய கொலைக்கு சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் அனுமதியளித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையில் வௌிக்கொணரப்பட்டுள்ளது. ஊடகவியலாளரை கொல்ல அல்லது கைது செய்ய அவர் அனுமதியளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பில் சவுதி அதிகாரிகள் சிலருக்கு அமெரிக்காவால் தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் மன்னருக்கோ அல்லது முடிக்குரிய இளவரசருக்கோ தடைகள் விதிக்கப்படவில்லை. இவ்வாறிருக்க, அமெரிக்க புலனாய்வுத்துறையின் அறிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. அத்துடன், ஊடகவியலாளரின் கொலைச் சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சவுதி மன்னருக்கும் இடையில் நேற்று முன்தினம் (25) முதன்முதலாக தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததுடன், இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த இருதரப்பினரும் இணங்கியமை குறிப்பிடத்தக்கது.