தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆராய விசேட குழு 

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் ஆராய விசேட குழுக்கள் நியமனம்

by Staff Writer 27-02-2021 | 2:51 PM
Colombo (News 1st) கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தேசிய தொற்று நோயியல் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று, பிராந்திய சுகாதார அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் செயற்படுகின்றனரா என்பது தொடர்பில் இந்த குழுவினர் ஆராயவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிப்பவர்கள் தவிர்ந்த எவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டாம் என அனைத்து பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 30 வயதிற்கும் அதிகமான, நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக பதிவாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதி அபாயம் நிலவுகின்றமை, கடந்த நாட்களில் அதிக நோயாளர்கள் பதிவாகியமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தெரிவு செய்யப்படவுள்ளன. இதற்கிணங்க, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதி அபாயம் நிலவும் 25 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இதனிடையே, தடுப்பூசி வழங்குவது தொடர்பிலான பொய் பிரசாரங்களில் இருந்து தவிர்ந்து பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.