by Staff Writer 26-02-2021 | 8:02 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான விசேட வர்த்தமானி நேற்று (25) வௌியிடப்பட்டது.
நேற்று இரவு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, COVID-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்துடன் தொடர்புபட்ட சில விடயங்களை மாற்றி இந்த விசேட வர்த்தமானி சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டது.
அதற்கமைய, COVID காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்ற விடயத்திற்கு மாற்றீடாக, உடல்களை ''தகனம் மற்றும் நல்லடக்கம்'' செய்ய முடியும் என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமையவே நல்லடக்கம் செய்ய முடியும்.
உரிய அதிகாரியின் அனுமதி வழங்கப்படும் இடத்திலேயே உடல்களை நல்லடக்கம் செய்ய முடியும் எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே , இலங்கையில் COVID-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டரில் இலங்கை அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரேஷி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இது தாமதாக எடுக்கப்பட்ட ஒரு சிறந்த தீர்மானம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, அதனை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.