by Staff Writer 26-02-2021 | 2:22 PM
Colombo (News 1st) தற்கொலை தாக்குதல்தாரியான மொஹம்மது ஹஸ்துனின் மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றமை தொடர்பில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கவனத்திற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விடயங்களை ஆணைக்குழு தவிர்த்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர், நாமல் குமார என்பவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கான சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிக்கொணர்ந்தமை, அது தொடர்பில் வௌிநாட்டினர் ஒருவர் கைது செய்யப்பட்டு முக்கியஸ்தர் ஒருவரின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டமையை ஆகியவற்றையும் ஆணைக்குழு கவனத்திற்கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒருவர் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தவறுகின்றமை, எந்த வகையிலும் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு காரணமாக அமையாதென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, தமக்குரிய பொறுப்பினை ஆற்றியுள்ளமை ஆணைக்குழுவின் அறிக்கையினூடாக புலப்படுவதாக நிறைவேற்றுக்குழு தெரிவித்துள்ளது.
அவருக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் வழக்கினையும் தாக்கல் செய்ய, சட்ட ரீதியாகவோ தர்க்க ரீதியாகவோ இடமில்லை என நிறைவேற்றுக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆணைக்குழு தமக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பை மீறி விடயங்களை குறிப்பிட்டுள்ளதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.