மகனுக்காக சித்திரவதைகளைத் தாங்கிக்கொண்ட பணிப்பெண்

சிங்கப்பூரில் பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொலை; இந்திய வம்சாவளி பெண் கைது

by Bella Dalima 25-02-2021 | 4:40 PM
Colombo (News 1st) சிங்கப்பூரில் மியன்மாரை சேர்ந்த பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மூன்று வயது மகனை வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு சென்றிருந்த 24 வயதான மியன்மார் பெண் தொடர்ச்சியாக சித்திரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. அவரை பணியமர்த்திய இந்திய வம்சாவளி பெண் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருப்பதுடன், இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வௌியாகவுள்ளது. 2015 முதல் 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த இச்சம்பவத்தின் முழு விவரமும் தற்போது தான் வௌிவந்துள்ளது. உயிரிழந்த பணிப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்களும் உடலின் மேற்பரப்பில் மாத்திரம் 47 காயங்களும் இருந்துள்ளன. இந்த கொடூரக் கொலை தொடர்பில் 40 வயதான காயத்திரி எனும் இந்திய வம்சாவளி பெண்ணும் அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைது செய்யப்பட்டுள்ளனர். காயத்திரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். உயிரிழந்த பணிப்பெண் பியாங் இங்கை டொன், அவ்வப்போது காயத்ரி வீட்டில் தாக்கப்பட்டது தொடர்பான சில காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு பியாங் இங்கை டொன் என்பவர் பணிப்பெண் வேலைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண் தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்த நிலையில், காயத்திரியின் வீட்டில் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். கைபேசி பயன்படுத்தக் கூடாது, ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக் கூடாது என காயத்திரி விதித்த சில நிபந்தனைகளிளை ஏற்றுக்கொண்டுள்ளார் பியாங் டொன். மற்றவர்களுடன் தனது பணிப்பெண் பேசக் கூடாது என்பதே காயத்திரியின் விருப்பம். அதனால் விடுப்பில்லாத நாட்களுக்கும் சேர்த்து பியாங் டொன்னுக்கு அதிகத் தொகை அளிக்க அவர் முன்வந்துள்ளார். காயத்திரி வீட்டில் அவரது கணவர், தாயார், இரு குழந்தைகள், வாடகைக்கு குடியிருக்கும் இருவர் இருந்துள்ளனர். பணியில் சேர்ந்த சில தினங்களிலேயே பியாங் டொன் சரியாக வேலை பார்க்கவில்லை என அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளார் காயத்திரி. சுத்தமாக இல்லை, அதிகமாக சாப்பிடுகிறார், மெதுவாக வேலை செய்கிறார் என்று பணிப்பெண் மீது புகார்களை அடுக்கியுள்ளார். தொடக்கத்தில் அவ்வப்போது உரக்க கத்தி பணிப்பெண்ணை திட்டித்தீர்த்த காயத்திரி, பிறகு உடல் ரீதியிலும் பியாங் டொன்னை துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். தமது குழந்தைகளையும் பணிப்பெண்ணையும் கண்காணிப்பதற்காக வீட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கெமராக்களைப் பொருத்தியுள்ளார் காயத்திரி. அவற்றில் பதிவான காட்சிகள் தான் பின்னாட்களில் அவரை பொலிஸில் சிக்க வைத்துள்ளது. பணியில் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு பியாங் டொன் உடல் ரீதியிலான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ளார். அடி, உதைக்கு மத்தியில் தண்ணீரில் தோய்க்கப்பட்ட ரொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவு அல்லது சிறிதளவு சோறு ஆகியவைதான் அவருக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதிகம் சாப்பிடுவதாகக் குறை கூறிக்கொண்டே உணவின் அளவை வெகுவாகக் குறைத்து கொடுமைப்படுத்தியுள்ளார் காயத்திரி. வேறு வழியின்றி வீட்டுக் குப்பைக் கூடையில் கொட்டப்படும் வீணாகிப்போன உணவை சாப்பிடுவதற்கும் தயாராக இருந்துள்ளார் பியாங் டொன். ஆனால் அதையும் கண்டுபிடித்து சாப்பிடவிடாமல் தடுத்துள்ளனர். தினமும் இரவு 5 மணி நேரம் மட்டுமே பியாங் டொன் தூங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உறங்கினால் எட்டி உதைத்து எழுப்புவார் காயத்திரி. குளிப்பது, கழிவறைக்குச் செல்வது என எதுவாக இருப்பினும் கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தனது பணிப்பெண்ணுக்கு காயத்திரி பிறப்பித்த கட்டளைகளில் ஒன்று. 14 மாத பணிக்காலத்தில் 15 கிலோ எடை குறைந்து போனார் பியாங் டொன். பியாங் டொன் சுத்தமாக இல்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்த காயத்திரி, ஒரே சமயத்தில் பல முகக்கவசங்களை அணிந்தபடி வீட்டைச் சுத்தப்படுத்த உத்தரவிட்டுள்ளார். தனது பணிப்பெண்ணின் முகத்தைப் பார்க்கக் கூட அவர் விரும்பவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக தனது முதலாளி மற்றும் அவரது தாயாரால் பியாங் டொன் தாக்கப்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதேபோல், ஒரே நாளில் பலமுறை தாக்குதலுக்கு ஆளாவதும் நிகழ்ந்துள்ளது. கடந்த 2016 ஜூன் மாதம் பணிப்பெண் மின்னழுத்தியால் துணிகளை தேய்த்துக்கொண்டிருந்த போது, அதனைக் கொண்டு அவரது நெற்றியிலும் கையிலும் சூடு வைத்துள்ளார். இதனால் பியாங் டொன் அலறித் துடிக்க, அப்போதும் அவர் சரியாக வேலை செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற துன்புறுத்தல்கள் நிறைந்த காணொளிப் பதிவுகள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் காட்டப்பட்டுள்ளன. அதில் பியாங் டொன் பரிதாபகரமான நிலையில் உடல் மெலிந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதும் பதிவாகி இருந்தது. இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு பியாங் டொன்னுக்கு உச்சபட்ச கொடுமை நிகழ்ந்துள்ளது. அவரது இரு கைகளையும் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்துள்ளனர். அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் தனது அறையை விட்டு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதில் தான் காயத்திரி கவனமாக இருந்துள்ளார். 2016 ஜூலை 25ஆம் திகதி இரவு சுமார் 11.40 மணியளவில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பியாங் டொன்னை ஓங்கி குத்திய காயத்ரி, வேகமாக வேலைகளைச் செய்யுமாறு திட்டியுள்ளார். பின்னர் கோபம் குறையாமல் அவரது முடியைப் பிடித்து இழுத்தபோது பியாங் டொன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போதும் காயத்திரி விடவில்லை. பின்புறமாக கீழே விழுந்ததால் எழ முடியாமல் பியாங் டொன் தத்தளிக்க, தனது தாயார் பிரேமாவை அழைத்துள்ளார் காயத்திரி. அதன் பின்னர் இருவருமாகச் சேர்ந்து பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிரேமா தன் பங்குக்கு பியாங் டொன்னை சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என்று வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குமாக இழுத்துச் சென்றபடியே தாக்கியுள்ளார். பியாங் டொன் வயிற்றில் காயத்திரி எட்டி உதைக்க, பிரேமா முகத்தில் குத்தியதுடன் கழுத்தையும் நெரித்துள்ளார். ஈரத்துணி, பட்டினி, காயங்களால் ஏற்பட்ட வலியுடன் கண்மூடிய பியாங் டொன் இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், தனக்கு இரவு உணவு கிடைக்குமா என்று கேட்க, ஏற்கெனவே உணவு கொடுத்தாயிற்று என்று கூறியுள்ளார். மேலும் இரவு தூங்கும் நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று கூறி உரங்கச் செல்லுமாறும் பணித்துள்ளார். அன்றிரவும் பியாங் டொன்னின் கைகள் ஜன்னல் கம்பிகளுடன் கட்டப்பட்டன. துணிகளை துவைத்த போது அவர் அணிந்திருந்த ஆடைகள் ஈரமாகிவிட்டன. எனினும் உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் அந்த நள்ளிரவு வேளையில் அவரது வயிற்றில் எட்டி உதைத்துள்ளார் காயத்ரி. ஈரத்துணியுடன், பட்டினியுடன், உடல் காயங்களால் ஏற்பட்ட வலி வேதனையுடன் கண் மூடியுள்ளார் பியாங் டொன். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அவரை எழுப்ப வந்துள்ளார் காயத்திரி. பியாங் டொன் கண் விழிக்கவில்லை. இதனால் கோபமடைந்த காயத்திரி வழக்கம்போல் எட்டி உதைத்ததுடன், கழுத்திலும் தலையிலும் தொடர்ந்து குத்தியுள்ளார். இறுதியாக பணிப்பெண்ணின் தலைமுடியை தன் கைகளால் சுருட்டி பின்னோக்கி இழுக்க, பியாங் டொன்னின் கழுத்துப் பகுதியும் பின்னோக்கி இழுக்கப்பட்டது. இந்த சித்ரவதைக்குப் பிறகும் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. தன் தாயார் பிரேமாவை மீண்டும் அழைத்துள்ளார் காயத்திரி. இருவரும் சேர்ந்து பியாங் டொன்னுக்கு காப்பி போன்ற பானம் ஒன்றைப் புகட்ட முயன்றனர். சில்லிட்டுப் போயிருந்த உடலில் கை கால்களைத் தேய்த்துவிட்டு சூடேற்றவும் முயன்றுள்ளனர். எதற்கும் பலனின்றிப் போகவே மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார். காலை சுமார் 10.50 மணிக்கு வந்த மருத்துவர், பியாங் டொன்னை பரிசோதித்த பின்னர் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளார். பணிப்பெண்ணைத் தாக்கினீர்களா, அவருக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதா என்று மருத்துவர் கேட்ட போது, பியாங் டொன் தவறி கீழே வீழ்ந்ததாகவும், மருத்துவரின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை இயல்பாக இருந்ததாகவும் கூறி தாயும் மகளும் சமாளிக்கப் பார்த்துள்ளனர். முன்னதாக பியாங் டொன் அணிந்திருந்த உடையை மாற்றி அவரை வீட்டு சோஃபாவில் படுக்க வைத்திருந்தனர். அன்றைய தினம் காயத்திரியின் கணவர் கெவின் செல்வம் பணிக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அங்கு இல்லை. போலிஸ் விசாரணையை அடுத்து காயத்திரி, அவரது தாயார், கணவர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். ஜூலை 25 அன்று காலை காயத்திரி, பியாங்கின் கழுத்தை மீண்டும் மீண்டும் பின்னோக்கி இழுத்தத்தில் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்ததால் தான் மரணம் நிகழ்ந்தது என தெரிய வந்துள்ளது. நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 28 குற்றச்சாட்டுகளை காயத்திரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு ஆயுள் தண்டன விதிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். தாய்மை அடைந்திருந்தபோது காயத்திரி கடுமையான மன அழுத்தத்திற்கு ஆட்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 'OCD' எனப்படும் மனநலப் பிரச்சினையால் அவர் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி பியாங் டொன் இறந்தபோது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. எந்த மகனின் எதிர்காலத்திற்காக வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்தாரோ அந்த 3 வயது குழந்தையை மீண்டும் பார்க்காமலேயே கண்மூடிவிட்டார் பியாங் டொன்.      

Source:BBC