21/4 தாக்குதல் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

by Bella Dalima 25-02-2021 | 6:32 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முதலாவது பாகம், ஜனாதிபதி செயலாளரால் இன்று கையளிக்கப்பட்டதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். அறிக்கையில் 2 தொடக்கம் 5 வரையான பாகங்களையும், விசாரணைக்கான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களையும் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி கூறினார். இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் சிங்களம் மற்றும் ஆங்கில பிரதிகள் மாத்திரமே சபைக்கு சமர்ப்பிக்கப்படுவதாக இதன்போது அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இந்த அறிக்கை தொடர்பான விவாதத்திற்கு மூன்று நாட்கள் அவசியம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல சபையில் கோரிக்கை விடுத்தார். அதற்கமைய, விவாதத்தை நடத்த தயார் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.