எரிபொருள் விலையை நிலையாகப் பேண ஆரம்பிக்கப்பட்ட நிதியத்தில் பணம் இல்லை

by Bella Dalima 25-02-2021 | 8:25 PM
Colombo (News 1st) உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், இலங்கையில் விலையை நிலையாகப் பேணுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிதியத்தில் பணமில்லை என்பது இன்று உறுதியானது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் ஆகியோர் கலந்துகொண்டனர். எரிபொருள் விலையை நிலையாக வைத்திருப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதியம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். நிதியத்தில் பணம் உள்ளதா என கேட்கப்பட்டதற்கு, தற்போது பணம் இருக்க வாய்ப்பில்லை என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
எண்ணெய் விலை குறையும் போதே அந்த நிதியத்தை உருவாக்க வேண்டும். விலை கூடியபோது நாம் விலையைக் கூட்டவில்லை அல்லவா? இந்த வருடம் இறக்குமதிக்காக ஒரு பில்லியன் மேலதிகமாக செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
எனவும் அவர் கூறினார். அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த நிதியம் தொடர்பாக முதலில் தகவல்களை வௌியிட்டிருந்தார். இதன்போது,
எரிபொருள் சூத்திரத்தை நடைமுறைப்படுத்தாதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுத்துள்ளது. ஒரு வருடமாகும் வரை எவ்வித மாற்றமும் ஏற்படாது. உலக சந்தையில் விலை அதிகரித்தாலும் விலையை நாம் நிலையாகப் பேணிச் செல்வோம். இலங்கை அரசாங்கத்தின் இரண்டாவது கொள்கை ரீதியலான தீர்மானம் என்னவென்றால், எண்ணெய் விலையை நிலையாக பேணுவதற்காக நிதியம் ஒன்றை நாம் ஸ்தாபிப்போம். இலாபம் கிடைக்கும்போது அந்த நிதியத்தில் பணத்தை சேமித்து நட்டத்தின்போது அதில் ஒரு பகுதியை பயன்படுத்துவதற்காகவே இந்த நிலையான விலை நிதியம் உருவாக்கப்படுகிறது
என பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டாகும் போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 70 டொலரை விடவும் அதிகரிக்கும் என மோகன் ஸ்டான்லி எனப்படும் சர்வதேச முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது. அனுமானிக்கப்பட்ட அளவை விட வேகமாக எண்ணெய் சந்தையில் விலை அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்