இந்தியாவிலிருந்து 5 இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன

by Bella Dalima 25-02-2021 | 3:09 PM
Colombo (News 1st) ஐந்து இலட்சம் Oxford–AstraZeneca Covishield தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவின் சென்னை விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தினூடாக தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று பகல் 1.30-க்கு குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குளிர்மைப்படுத்தப்பட்டுள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இன்று மாலை மத்திய களஞ்சிய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் அதிகுளிரூட்டப்பட்ட லொறிகளின் மூலம் இவை கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி, 28 ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து கிடைத்த தடுப்பூசிகளில் 3,60,000 தடுப்பூசிகள் இதுவரை ஏற்றப்பட்டுள்ளன. தடுப்பூசிகளில் 1,16, 907 தடுப்பூசிகள் எஞ்சியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காணப்படும் கிராம சேவையாளர் பிரிவுகளில் நாளை முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.