முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

by Staff Writer 25-02-2021 | 8:41 AM
Colombo (News 1st) அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவ​ணை கல்வி நடவடிக்கைகள் இன்று (25) நிறைவடைகின்றன. இதனிடையே, 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத் தாரதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காத பரீட்சார்த்திகள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து தங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவிடுவதனூடாக பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக அனுமதிப்பத்திரத்தில் காணப்படும் தவறுகளை பரீட்சார்த்திகள் திருத்திக்கொள்ள முடியும் என அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. எனினும், ஒரு தடவை மாத்திரமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 4,513 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.