Colombo (News 1st) நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் (24) 4 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.
பொரலஸ்கமுவ, கல்கிசை, கொட்டுகொட மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில், பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலையில், COVID - 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு நேற்று (24) மரணமடைந்துள்ளார்.
கொரோனா தொற்றுடன் குருதி நஞ்சாகியமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மோசமடைந்த சிறுநீரக நோய் நிலைமையே இவரது மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்கிசை பிரதேசத்தை சேர்ந்த, 69 வயதான பெண் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தீவிர நீரிழிவு மற்றும் COVID - 19 தொற்று நிலைமையால் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
கொட்டுகொட பகுதியை சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர் வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
COVID - 19 நியூமோனியா நிலைமையால் இவர் உயிரிழந்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் வெலிசறை காசநோய் வைத்தியசாலையில் COVID - 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, வட கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு நேற்று (24) உயிரிழந்துள்ளார்.
COVID - 19 நியூமோனியா மற்றும் தீவிர இதயநோய் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
