இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து ஐ.நா சபையின் அங்கத்துவ நாடுகள் கருத்து

இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து ஐ.நா சபையின் அங்கத்துவ நாடுகள் கருத்து

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2021 | 9:37 pm

Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் இன்று கருத்துக்களை தெரிவித்தன.

இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை நேரப்படி நேற்றிரவு மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் உரையாற்றினர்.

ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் தெரிவித்ததாவது,

நீதிமன்ற சுயாதீனத்தன்மை, இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் ஏனைய முக்கிய நிறுவனங்களின் அதிகாரம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக குறைவடைந்துள்ளது. COVID-19 காரணமாக உயிரிழப்போரை கட்டாயம் தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு கவலையும் அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுக்கள் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியாமற்போயுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழு ஊடாக ஏற்கனவே இருந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீள் பரிசீலனை செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் எவ்வித பலனும் அற்றதாகும். எனது அலுவலகம் பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான முன்னேற்றத்தை மேற்பார்வை செய்வதற்கு தயாராகவுள்ளது

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்ததாவது,

ஆணையாளரின் அறிக்கையை இலங்கை முற்றாக நிராகரிக்கின்றது. இதன் ஊடாக அநீதி ஏற்படுகிறது. கௌரவமும் இறைமையும் உள்ள ஒரு நாட்டின் உள்ளக நிர்வாகம் சார்ந்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆணையாளரின் அலுவலகம் இந்த அறிக்கை வௌியானவுடன் அதற்கு விரிவான பிரசாரத்தை வழங்கியமை கவலைக்குரியது. இந்த அறிக்கை தொடர்பில் இலங்கையின் பதிலை ஒரு இணைப்பாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அறிக்கையூடாக எதிர்காலத்தில் முன்வைக்கப்படுகின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டாம் என இலங்கை அனைத்து உறுப்பு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளான பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, கனடா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், வடக்கு மெசடோனியா, அவுஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து, வெனிசுலா, ஜப்பான், நெதர்லாந்து, இந்தியா, கொரியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஈரான், சீனா, மாலைத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் கருத்துக்களை வௌியிட்டன.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்