ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை உத்தியோகபூர்வமாக நிராகரித்தது இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை உத்தியோகபூர்வமாக நிராகரித்தது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2021 | 9:24 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கையர்களை இலக்கு வைத்து தடை விதித்தல், பயணத் தடைகளை விதித்தலால் இறையாண்மை உள்ள நாட்டின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து இலங்கை எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இடம்பெற்று வருகிறது.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதுடன், இலங்கை நேரப்படி இன்றிரவு நடைபெறும் அமர்வில் அந்த அறிக்கை குறித்து அவர் உரையாற்றவுள்ளார்.

நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டமை, முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு தடை விதிக்குமாறு தனது அறிக்கையினூடாக உறுப்பு நாடுகளிடம் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் பயணத் தடை விதிப்பதற்கும் அவர் தனது அறிக்கையில் யோசனை முன்வைத்துள்ளார்.

உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என இலங்கை அரசாங்கம் அனுப்பிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது நாட்டின் உரிமையை மீறும் செயல் என்பதுடன், இறையாண்மைக்கான அடிப்படை விடயங்களை மீறும் செயற்பாடு எனவும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அமைதி காக்கும் படையின் செயற்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கும் யோசனையை நிராகரித்துள்ள இலங்கை அரசாங்கம், தொழில் ரீதியாக செயற்படும் இறைமையுள்ள ஒரு நாட்டின் இராணுவம் மீது சுமத்தப்படும் அழுத்தம், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறுவதாகவும் அறிவித்துள்ளது.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக நீதிமன்றத்தின் கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கு அழுத்தம் ஏற்படுவதாக மிச்சேல் பெச்சலட் தனது அறிக்கையில் சுமத்தும் குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை போன்ற ஒரு தனி நாட்டை, எவ்வித சாட்சியங்களும் இன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அபாயகரமானது என்பதால் இது குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புவாய்ந்த ஒரு உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை திறந்த மற்றும் செயற்றிறன்மிகு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கு அர்ப்பணிப்பு செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இம்முறை மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இலங்கை தொடர்பில் ஒருங்கிணைந்த குழு தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜேர்மன், வடக்கு மெசடோனியா, மொன்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இந்த ஒன்றிணைந்த குழுவில் அடங்குகின்றன.

இலங்கையில் வன்முறைகள் இடம்பெறுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படும் நிலைமை காணப்படுவதாகவும் அவர்கள் தயாரித்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை , மனித உரிமை பாதுகாப்பு மற்றும் அதனை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் செயலிழந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

COVID தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை கட்டாயத் தகனம் செய்ய வேண்டும் என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பிலும் ஒருங்கிணைந்த குழு அதிகக் கவனம் செலுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 மற்றும் 51 ஆவது கூட்டத் தொடர்களின் போது, இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த குழுவின் இந்த பிரேரணை குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இறுதி தீர்மானம் தயாரிக்கும் போது அதில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, மனித உரிமைகள் பேரவை அரசியல் கட்சி சார்பான ஓர் நிறுவனம் என குற்றம் சுமத்தி, ட்ரம்ப் நிர்வாகக் காலத்தில், 2016 ஆம் ஆண்டு பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியது.

எனினும், அதில் செயற்றிறன் மிகு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில், ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையை பெறும் எதிர்பார்ப்பில் உள்ளது.

தமது வௌிநாட்டுக் கொள்கை , மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் COVID தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை கட்டாயத் தகனம் செய்ய வேண்டும் எனும் கொள்கைக்கு, OIC எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மனித உரிமைகள் பேரவையில் கடும் கண்டனத்தை வௌியிட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பாகிஸ்தான், மாலைத்தீவு, மலேசியா, துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட 57 நாடுகள் இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளன.

இந்த பின்புலத்திலேயே மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் தமது அறிக்கை தொடர்பில் இன்று உரையாற்றிய பின்னர், பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை குறித்து கருத்துக்களை வௌியிட உள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்