தடுப்பூசி திட்டம் விஞ்ஞான கோட்பாடுகளுக்கு முரணானது

நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் விஞ்ஞான கோட்பாடுகளுக்கு முரணானது - இலங்கை சமூக நல வைத்திய அதிகாரிகள் சங்கம்

by Staff Writer 23-02-2021 | 7:32 AM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் அடிப்படை விஞ்ஞான கோட்பாடுகளுக்கு முரணாக இடம்பெறுகின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சமூக நல வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு தீர்மானம் எடுப்பதை விடுத்து விஞ்ஞான ரீதியிலான பரிந்துரைக்கு அமைவான முன்னுரிமை பட்டியலுக்கு ஏற்ப தடுப்பூசி வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. COVID - 19 தடுப்பூசி தொடர்பில் தயாரிக்கப்பட்ட தேசிய தடுப்பூசி ஏற்றும் திட்டத்திற்கு கடந்த ஜனவரி மாதம் தொற்றுநோய் தொடர்பான தேசிய ஆலோசனை குழு அங்கீகாரம் வழங்கி உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளது. இந்த வருடத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தடுப்பூசிகளே கிடைக்கும் என்ற அடிப்படையில் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும் இலங்கை சமூக நல வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள், பொருளாதார மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அபாயத்தை எதிர்நோக்கியவர்கள் முன்னுரிமை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். எனினும் தெரிவு செய்யப்பட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களை இலக்காக கொண்டு தடுப்பூசி ஏற்றப்படுகின்றமை தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஞ்ஞான ரீதியிலான இணக்கப்பாடுகள் மற்றும் முன்னுரிமை பட்டியலுக்கு முரணானது என இலங்கை சமூக நல வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.