சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு 180 ஆட்சேபனை மனுக்கள்; மீண்டும் கூடி கலந்துரையாட திட்டம்

by Staff Writer 23-02-2021 | 3:58 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பள நிர்ணய சபை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 900 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீரமானம் தொடர்பில் சுமார் 180 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆட்சேபனைகள் தொடர்பில் மார்ச் முதலாம் திகதி கலந்துரையாடவுள்ளதாக தொழில் ஆணையாளர் குறிப்பிட்டார். தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1040 ரூபாவை வழங்க வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் கடந்த 8 ஆம் திகதி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை சம்பள நிர்ணய சபை கூடிய போதிலும், எவ்வித இணக்கப்பாடும் இன்றி கூட்டம் நிறைவடைந்தது. பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவர் மாத்திரமே அன்றைய தினம் கலந்து கொண்டிருந்தமையினால் கலந்துரையாடல் பிற்போடப்பட்டது.

ஏனைய செய்திகள்