இலங்கை - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு

by Staff Writer 23-02-2021 | 7:00 PM
Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரண்டு பிரதமர்களுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணியளவில் ஆரம்பமானது. வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தும் ஷா மஹ்மூத் குரேஸி உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர். பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு நாடுகளின் பிரதமர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பாகிஸ்தான் பிரதமருக்கு விமான நிலையத்தில் இராணுவ மரியாதைகளுடன் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர். முன்னதாக, பாகிஸ்தான் பிரதமரை ஏற்றிவரும் விமானத்திற்கு இந்திய வான் பரப்பில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பிரதமர் நாளை (24) ஜனாதிபதியை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.