மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை: எழுத்தாணை மனு மீது 12 ஆம் திகதி விசாரணை

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை: எழுத்தாணை மனு மீது 12 ஆம் திகதி விசாரணை

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை: எழுத்தாணை மனு மீது 12 ஆம் திகதி விசாரணை

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2021 | 7:25 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கருணாகரன் கஜேந்திரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனுவை எதிர்வரும் மே 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனையில் மகாவலியின் இடது கரையில் மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்டிருந்த 100 ஏக்கர் காணியை சோள செய்கைக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு, மகாவலி அதிகார சபை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கக் கோரியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அர்ஜூன ஒபேசேகர, மாயாதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சோளச் செய்கைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட அதிகாரப்பத்திரம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் காலாவதியாவதால், மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கான துரித தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை கிடைக்க வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரு நீதிமன்றில் கூறினார்.

நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட கறவை மாடுகளுக்கு உணவளித்த மயிலத்தமடு, மாதவனை பகுதியை மீண்டும் கால்நடை வளர்ப்பாளர்களிடம் கையளித்தால் தமது மனுவை வாபஸ் பெறுவதற்கு தயாராகவுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், மட்டக்களப்பு பிரதேச செயலாளர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் உள்ளிட்ட தரப்பினர் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்