ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளில் மைத்திரிபால உள்ளடக்கம்

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளில் மைத்திரிபால உள்ளடக்கம்

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2021 | 9:14 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமது ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கையளிப்பது உகந்ததென தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களுக்கு அமையவே தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள்,அரசியல்வாதிகளை ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது.

பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடங்குகின்றார்.

இதனைத் தவிர பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிஸ், முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோரை ஆணைக்குழு பெயரிட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் தேசிய புலனாய்வு சேவையின் தலைவர் சிசிர மென்டிஸ், முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தண்டனை சட்டக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தை இழைத்துள்ளதால், அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என சட்டமா அதிபருக்கு ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வௌிநாடு செல்வதாக இருந்தால், பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்க, கட்டாயமாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஏற்பாட்டினை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதியிடமுள்ள அனைத்து அதிகாரங்களும் பதில் பாதுகாப்பு அமைச்சருக்கும் இருக்க வேண்டும் எனவும் தேசிய பாதுகாப்பு சபையை அழைத்து ஆலோசனைகளை வழங்கும் அதிகாரம் பதில் அமைச்சருக்கு இருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

வெடிபொருட்கள் மற்றும் ஆயுதக் கடத்தலை தடுப்பதற்காக இலங்கையின் கடற்பரப்பு மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் ஆணைக்குழுவின் மற்றுமொரு பரிந்துரையாகும்.

ஏப்ரல் 21 தாக்குதல் மாத்திரமல்லாது பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வழக்குகள் தொடர்பில் தொடரப்படுகின்ற அனைத்து குற்றவியல் வழக்குகளையும் விசாரித்து முடிவுறுத்துவதற்காக மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகளுக்கு விசேட பாதுகாப்பையும் பயிற்சிகளையும் வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த வழக்குகள் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழு தமது பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்