ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் 

by Staff Writer 21-02-2021 | 7:42 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை (22) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவில் பிரித்தானியா, கனடா, மொன்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன. இலங்கையில் COVID - 19 தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்தும் கொள்கை, இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதிநிதிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள விடயங்களில் முதன்மையான விடயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பெச்சலட்டினால் இலங்கை தொடர்பிலான அறிக்கையொன்று ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இணையவழியில் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். அத்துடன் வௌிவிவகார அமைச்சரின் தலைமையிலான குழுவொன்றும் இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளது. குறித்த குழுவில் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் ஶ்ரீபால டி சில்வா, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, வலய ஒத்துழைப்பிற்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.