வறுமைக்கோட்டின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்: 1000 ரூபா சம்பளம் போதுமானதா?

by Staff Writer 20-02-2021 | 7:34 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை. எனினும், தற்போதைய சூழ்நிலையில் 1000 ரூபா கொடுப்பனவு போதுமானதா எனும் கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. ஒரு மாதத்தில் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாத்திரம் அவசியப்படும் ஆகக் குறைந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களாகக் கருதப்படுவர். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தரவுகளின்படி, நுவரெலியா மாவட்டத்திலேயே கொழும்பிற்கு அடுத்தபடியாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அதிகூடியவர்கள் பதிவாகியுள்ளனர். திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி, நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தனிநபருக்கு அடிப்படைத் தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்வதற்கு 5,475 ரூபா தேவைப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் அந்தத் தொகை 5,588 ரூபாவாக அமைந்துள்ளது. பதுளை மாவட்டத்தில் ஒருவருக்கு தமது உணவுத் தேவையை மாத்திரம் பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் 5044 ரூபா தேவைப்படுவதுடன், மாத்தளை மாவட்டத்தில் 5,237 ரூபா என அரசாங்க புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கு இந்த வருமானம் கிடைக்கிறதா?? தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும் விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவும் வழங்கப்படுகிறது. மாதத்தில் ஆக்குறைந்தது 20 நாட்களாவது வேலை செய்தால் மாத்திரமே இவர்களுக்கு 15000 ரூபா சம்பளம் கிடைக்கும். அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் படி உணவு மற்றும் அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் 5 பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 25,735 ரூபா கிடைக்க வேண்டிய நிலையில், 15 000 ரூபா கிடைப்பதனால் இந்த மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் மாதாந்தம் 15,000 ரூபா சம்பளம் கூட கிடைக்காத எத்தனையோ குடும்பங்களை எம்மால் காண முடிகிறது. இந்த நிலையிலேயே பல வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட 1000 ரூபா சம்பளப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. ஆட்சியாளர்கள் காலத்திற்கு காலம் வாக்குறுதிகளை வழங்கினாலும் இன்னும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா வருமானத்தைக் கூட பெற முடியவில்லை.