உள்ளக பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பிற்கேற்ப தீர்வு

உள்ளகப் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பிற்கேற்ப தீர்வு காண வேண்டும்: தினேஷ் குணவர்தன அறிக்கை

by Bella Dalima 20-02-2021 | 4:30 PM
Colombo (News 1st) இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு நாட்டின் அரசியலமைப்பிற்கு ஏற்ப தீர்வு காண வேண்டும் என வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு, உயர் நீதிமன்ற நீதியரசரொருவரின் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சிக் காலத்தில் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு அரசியலமைப்பு ரீதியிலான ஏற்பாடுகள் இல்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போதைய அரசாங்கம் அதிலிருந்து விலகுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், யுத்த காலத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயார் எனவும் வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று சவாலை எதிர்நோக்கும் நிலையில், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சிறந்த உறவைப் பேணுவதற்கும் அரசாங்கம் தயார் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் உள்நோக்கங்கள் குறித்து, கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வௌிவிவகார அமைச்சர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்