அம்பாறை - பாணமை கடற்பரப்பில் 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு

by Staff Writer 19-02-2021 | 4:48 PM
Colombo (News 1st) அம்பாறை - பாணமை கடற்பரப்பில் 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் நில அதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்தது. பாணமையிலிருந்து தென் திசையில் 26.6 கிலோமீட்டர் தொலைவிலும்,  கும்புக்கன் ஓயாவிலிருந்து கிழக்கில்  14.7 கிலோமீட்டர் தொலைவிலும் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. பல்லேகெலே, ஹக்மன உள்ளிட்ட நான்கு இடங்களிலுள்ள மானிகளில் இன்று முற்பகல் 11.14-இற்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலம் அதிர்ந்தமையை தௌிவாகக் காண முடிந்ததாக பிரதேச மக்கள் கூறியுள்ளனர். கடந்த மாதம் நாட்டில் பல நில அதிர்வுகள் ஏற்பட்டதுடன், கண்டி மற்றும் பதுளையில் அண்மைய சம்பவங்கள் பதிவாகியிருந்தன. விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலும் திகனவிலும் ரிதிமாலியத்த - எகிரிய பகுதியிலும் மடோல்சீம பகுதியிலும் நில அதிர்வுகள் பதிவாகின. பாணமையிலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் இன்று ஏற்பட்ட நில அதிர்வைத் தவிர, வனாட்டு மற்றும் சுமத்ராவிலும் இரு நில அதிர்வுகள் இன்று பதிவாகியிருந்தன.