மஸ்கெலியாவில் 8 தோட்டத் தொழிலாளர்கள் கைது

மஸ்கெலியாவில் 8 தோட்டத் தொழிலாளர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2021 | 5:28 pm

Colombo (News 1st) மஸ்கெலியா – சாமிமலை, ஓல்டன் தோட்டத்தை சேர்ந்த 8 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் நீதவான் முன்னிலையில் இவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

ஏழு பெண்களும் ஆணொருவருமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஓல்டன் தோட்ட முகாமையாளரையும் உதவி முகாமையாளரையும் தாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிரிவுகளில் உள்ள சுமார் 300 தொழிலாளர்கள் கடந்த 3 ஆம் திகதி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை இடமாற்றுமாறு கோரி இவர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இந்நிலையில், கடந்த 10 ஆம் திகதி சம்பளம் வழங்கப்படாது. 11 ஆம் திகதியே தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாத சம்பளம் பெற்றதன் பின்னரும் தொழிலாளர்கள் தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், 17 ஆம் திகதி தோட்ட முகாமையாளரையும், உதவி முகாமையாளரையும் தாக்க முயற்சித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்