கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்

by Staff Writer 19-02-2021 | 3:08 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் Serum நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 10,500 மில்லியன் ரூபா செலவில் 10 மில்லியன் COVID-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. 15 இலட்சம் தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தத்தில் நேற்றிரவு இலங்கை கைச்சாத்திட்டதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் Serum நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள 10 மில்லியன் தடுப்பூசிகளில், 1.5 மில்லியன் தடுப்பூசிகளை விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நேற்றிரவு கைச்சாத்திட்டதுடன், 526 மில்லியன் ரூபா பணமும் செலுத்தப்பட்டுள்ளது. உடன்படிக்கைக்கு அமைய, பணம் செலுத்தப்பட்ட உடனேயே 05 இலட்சம் தடுப்பூசிகளை விநியோகிக்க Serum நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கமைய, குறித்த 05 இலட்சம் தடுப்பூசிகளும் எதிர்வரும் வாரங்களில் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் மேலும் 05 இலடசம் தடுப்பூசிகளை வழங்கவும் அந்நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. 18 மில்லியன் தடுப்பூசிகள் கோரப்பட்ட போதிலும், 10 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கவே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இங்கிலாந்திலுள்ள astrazeneca தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திடம் தடுப்பூசிக்கான விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் Serum நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கான உற்பத்தி செலவு இதற்கு முன்னர் 3 டொலர்களாகக் காணப்பட்டது. எனினும், தற்போது தடுப்பூசி உற்பத்தி செலவு 5.25 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.