கெரவலப்பிட்டிய குப்பை மேட்டில் பரவிய தீ அணைக்கப்பட்டது

கெரவலப்பிட்டிய குப்பை மேட்டில் பரவிய தீ அணைக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2021 | 10:24 pm

Colombo (News 1st) கெரவலப்பிட்டிய குப்பை மேட்டில் நேற்று (18) பரவிய தீ தற்போது முற்றாக அணைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தீ பரவக்கூடிய அபாயமுள்ளதால் அனைத்துப் பிரிவுகளும் அவதானத்துடன் உள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கெரவலப்பிட்டிய குப்பை மேட்டின் ப்ளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் காணப்படும் நான்கு ஏக்கர் பகுதியில்
நேற்று தீ பரவியது.

தீயணைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் ஈடுபட்டனர்.

மூன்று மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் பரவிய தீ, நேற்றிரவு 11 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

தீ பரவுவதைக் கண்காணிப்பதற்கு இராணுவத்தின் பீரங்கிப் படையின் 15 ஆவது ட்ரோன் படையணி ஈடுபடுத்தப்பட்டது.

முத்துராஜவெல ஈர வலயத்தின் எல்லையிலுள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குரிய காணியிலேயே தீ பரவியது.

அளவிற்கு அதிகமாக இங்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

நாளொன்றில் மாத்திரம் சுமார் 1200 மெட்ரிக் தொன் குப்பை இங்கு கொட்டப்படுகின்றது. அவை வகை பிரிக்கப்படாமல் தான் கொட்டப்படுகின்றன.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளின் குப்பைகள் கெரவலப்பிட்டிய குப்பை மேட்டில் கொட்டப்படுவதில்லை என கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திசாநாயக்க தெரிவித்தார்.

எனினும், கெரவலப்பிட்டியவில் குப்பைகள் கொட்டப்படுவதை இன்றும் காண முடிந்தது.

இந்த குப்பை மேட்டிற்கு அருகில் எரிவாயு மற்றும் எரிபொருள் களஞ்சியத் தொகுதி காணப்படுவதுடன், முத்துராஜவெல ஈரவலயமும் அதற்கு அருகிலேயே உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்