வங்கிக் கணக்கு மூலம் 1 டிரில்லியன் ரூபாவை பரிமாற்ற இடம்பெற்ற முயற்சி முறியடிப்பு: 6 பேர் விளக்கமறியலில்

by Staff Writer 18-02-2021 | 6:41 PM
Colombo (News 1st) இளைஞர் ஒருவரின் வங்கிக் கணக்கு மூலம் பாரிய அளவு நிதி பரிமாற்றம் செய்ய முயன்ற சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றில் இருந்து சுமார் 1 டிரில்லியன் ரூபாவை பரிமாற்றம் செய்ய இடம்பெற்ற முயற்சி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பண பரிமாற்ற விவகாரம் தொடர்பில் வவுனியாவில் இளைஞர் ஒருவரை கடத்த முயன்ற 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இளைஞரை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் மாலை குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, அவிசாவளை, வவுனியா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்களின் சொகுசு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 25 வயதான இளைஞர் தற்போது வவுனியாவில் வசித்து வரும் நிலையில், அவருடன் நெருங்கிப் பழகியவர்களே அவரைக் கடத்த முயன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக தொழில் புரிந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.