உத்தேச மின் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள அனலைதீவில் நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர்

by Staff Writer 18-02-2021 | 8:48 PM
Colombo (News 1st) இலங்கையின் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் காணிகளும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்றது. பல்வேறு நோக்கங்களுக்காக வௌிநாடுகள் மற்றும் வௌிநாட்டு நிறுவனங்களுக்கு காணிகளை வழங்குவதன் மூலம் இயற்கை சூழலும் கலாசாரமும் பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்திற்காக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு யாழ்ப்பாணத்தின் தீவுகளில் காணி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் இன்று அனலைதீவிற்கு சென்றிருந்தனர். இந்த தீவானது ஏனைய தீவுகளை விட இயற்கை வளங்களும் விவசாய நிலங்களும் கொண்ட இடமாகக் காணப்படுகின்றது. நெல், மிளகாய், புகையிலை ஆகியவை பயிரிடப்படும் இடமாகவும் அனலைதீவு காணப்படுகின்றது. 6 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட அனலைதீவானது இந்திய துணைக் கண்டத்திற்கு அருகாமையில் இருப்பதால், சீன நிறுவனத்தின் திட்டத்தினால் இந்தியாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 650 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த தீவில் வசிக்கின்றனர். இந்தத் தீவில் உத்தேச மின் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை அவதானிக்க முடிந்தது. தொடர்ச்சியாக இந்திய மீனவர்களால் பிரச்சினைகளை எதிர்நோக்கும் தமக்கு சீனாவின் தலையீட்டினால் எதிர்காலத்தில் மேலும் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர். மூன்று நாட்களாக நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளுக்கு சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்திற்காக சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பில் தகவல்களை வௌிக்கொணர்ந்தனர்.