ஆங் சாங் சூகி மீது புதியதொரு குற்றச்சாட்டு

மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்பு; ஆங் சாங் சூகி மீது புதியதொரு குற்றச்சாட்டு

by Staff Writer 17-02-2021 | 10:38 AM
Colombo (News 1st) தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் நிர்வாகத் தலைவர் ஆங் சாங் சூகி மீது மேலுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று காணொளி தொழில்நுட்பத்தினுடாக மியன்மார் நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்​போது அந்நாட்டின் இயற்கை பேரழிவு சட்டத்தை மீறியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவான தகவல்கள் வௌியிடப்படவில்லை. சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனம் வைத்திருந்ததாக ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அது தொடர்பிலலேயே நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதனிடையே, அங் சாங் சூகி மீது மீதான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை எனவும் மனித உரிமை மீறல் என்பது தெளிவாகப் புலப்படுவதாகவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மியன்மார் மக்களுக்கு ஆதரவாக தாம் உள்ளதாகவும் அவர் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இராணுவத்தினரின் இந்த செயற்பாடுகளுக்கு தகுந்த விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இயற்கை பேரழிவு சட்டத்தை மீறியதாகவும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தவறியதாகவும் மியன்மார் ஜனாதிபதி வினட் மின்ட் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆங் சாங் சூகி மீது மேலும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.