மின் உற்பத்தி திட்டம் எந்த வகையிலும் பொருத்தமற்றது: நயினாதீவு மக்கள்

by Staff Writer 17-02-2021 | 7:49 PM
Colombo (News 1st) இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அமைந்துள்ள மூன்று தீவுகளில் சீனாவின் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மீள் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமது தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் நேற்று (16) கூறியிருந்தார். இந்தியாவை அண்மித்து அமைந்துள்ள, மக்கள் செறிந்து வாழ்கின்ற நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளே இந்த திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக நெடுந்தீவில் ஒதுக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக ஆராய்வதற்காக நியூஸ்ஃபெஸ்ட் குழாம் நேற்று அங்கு சென்றிருந்த நிலையில், மற்றுமொரு தீவான நயினாதீவிற்கு நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் இன்று சென்றிருந்தனர். வரலாற்று சிறப்பு மிக்க நயினா தீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் மற்றும் நாகதீப விகாரை என்பன இந்த தீவில் அமைந்துள்ளதால் இந்த தீவு கலாசார ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றது. 4.68 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த தீவில் 2650 பேர் வசித்து வருகின்றனர். தீவின் தென் பகுதியில் ஐயனார் கோவில் அருகில் வௌ்ளை மணல் கரையோரத்திலேயே மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்திற்கான மூன்று ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர்ப் பிரச்சினையால் அவதியுறும் தீவு மக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை மற்றும் தென்னந்தோப்புகள் அமைந்துள்ள இந்தப் பகுதிக்கு காற்றாலை சூரிய சக்தி கலப்பு மின் உற்பத்தி திட்டம் எந்த வகையிலும் பொருத்தமற்றது என மக்கள் தெரிவித்தனர். அரசியல் நோக்கங்களுக்காக வௌிநாட்டு நிறுவனங்களுக்கு காணிகளை வழங்குவதன் மூலம் ஏற்கனவே அழிவை சந்தித்துள்ள சமூகம் என்ற வகையில், மீண்டும் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடலாம் என மக்கள் கவலை வௌியிட்டனர். இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கையின் அமைச்சரவைக் குழு சீனா தனியார் நிறுவனத்திற்கு இந்த மூன்று தீவுகளிலும் காணி வழங்கியதன் காரணமாக சர்வதேச ரீதியில் இந்த செயற்றிட்டம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனைய செய்திகள்