இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது: சிவசேனா தலைவர் தெரிவிப்பு

by Staff Writer 17-02-2021 | 6:23 PM
Colombo (News 1st) இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நோக்கம் உள்ளதாக இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் BBC செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள இந்துத்துவவாதிகளுக்கே இவ்வாறான நோக்கம் உள்ளதாக தான் உறுதிபடக் கூறுவதாகவும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கூறியதாக BBC செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் நேபாளத்திலும் அரசியல் செயற்பாடுகளை விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் வௌியாகிய அறிவிப்பிற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேபாள வௌிவிவகார அமைச்சர் Pradeep Kumar Gyawali தமது ட்விட்டர் தளத்தில் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். இந்தியாவின் உள்விவகார அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான அமித் ஷாவின் கருத்துக்களுக்கு நேபாள அரசு தனது எதிர்ப்பை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பதாகவும் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளத்தின் எதிர்ப்பு குறித்து, இந்தியாவிற்கான நேபாள தூதுவர் Nilamber Acharya, இந்திய வெளிவிவகார அமைச்சின் நேபாள மற்றும் பூட்டானுக்கான இணைப்பு செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கை மற்றும் நேபாளத்தில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அமித் ஷா தெரிவித்ததாக, இந்திய திரிபுரா மாநில முதலமைச்சரும் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவருமான Biplab Kumar Deb அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஏனைய செய்திகள்