1000 ரூபா சம்பளம்: கலந்துரையாடலின் பின்னர் தீர்மானத்தை அறிவிப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவிப்பு

by Bella Dalima 16-02-2021 | 7:33 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (19) நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர், தமது தீர்மானத்தை அறிவிப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 900 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது. சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கினால், தம்மால் செலவுகளை ஈடு செய்துகொள்ள முடியாது என தாம் தொழில் அமைச்சுக்கு வழங்கியுள்ள ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளதாக சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா உழைக்க முடியுமான விதத்தில், தாம் ஏற்கனவே வழங்கியுள்ள முன்மொழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அதில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் எடுக்கவுள்ள தீர்மானம் தொடர்பில் வௌ்ளிக்கிழமை சம்பள நிர்ணய சபையுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்தையின் பின்னர் அறிவிப்பதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளத்தின் ஊடகப் பேச்சாளர் கூறினார். இதேவேளை, இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலும் இது தொடர்பில் வினவப்பட்டது. இம்மாத இறுதியில் கூட்டு ஒப்பந்தம் முடிவிற்கு வருவதால், அதன் பிறகு இரண்டு தரப்பினருக்குமிடையில் சம்பள அதிகரிப்பு தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்வதற்கு பதிலாக தொழில் அமைச்சுக்கு அதிகாரமுள்ள சம்பள நிர்ணய சபையூடாக குறைந்த பட்ச சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.