சீனாவின் மின் உற்பத்தி திட்டத்திற்காக வழங்கப்படவுள்ள தீவுகளுக்கு நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் விஜயம்

by Staff Writer 16-02-2021 | 8:12 PM
Colombo (News 1st) மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவு ஆகிய மூன்று தீவுகளிலுள்ள காணிகளை சீனாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அமைச்சரவை அண்மையில் அங்கீகரம் வழங்கியது. இந்தத் திட்டத்திற்காக நெடுந்தீவில் ஒதுக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக ஆராய்வதற்காக நியூஸ்ஃபெஸ்ட் குழாம் இன்று அங்கு சென்றிருந்தது. யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய தீவான நெடுந்தீவு தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதால், இந்தப் பகுதி பூகோள ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 47.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவின் கரையோரப் பகுதியை அண்மித்துள்ள 12 ஏக்கர் காணி காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு அழிவுகளை எதிர்நோக்கியுள்ள தமக்கு இந்த சர்வதேச நெருக்கடியால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படலாம் என நெடுந்தீவு - திரு லிங்கபுரம் கிராம மக்கள் அச்சம் வௌியிட்டனர்.