கொழும்பில் அபாய வலயங்களில் வாழும் மக்களுக்கு COVID தடுப்பூசி ஏற்றப்பட்டது

by Staff Writer 16-02-2021 | 7:11 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அபாய வலயங்களில் வாழும் மக்களுக்கு COVID தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது. கெம்பல் பிரதேச கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ தெரிவித்தார். இதேவேளை, மாநகர எல்லைக்குள் உள்ள மக்களுக்காக முதற்கட்டமாக 5000 தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ரோசி சோனாநாயக்க தெரிவித்தார். தற்போது 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்படுகிறது. நாட்டில் கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைய, 30 முதல் 64 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் நோயாளர்களாக இனம் காணப்படுவதாக சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடும் இன்று முன்னெடுக்கப்பட்டது. தடுப்பூசி ஏற்றப்பட்டாலும், தற்போதைய சுகாதார வழிமுறைகள் அவ்வாறே பின்பற்றப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வலியுறுத்தினார். சுகாதார வழிமுறைகள் குறித்து கவனத்திற்கொள்ளாமல் இருந்தால், குறுகிய கால இடைவௌிக்குள் சகல நிகழ்ச்சிகளையும், சகல செயற்பாடுகளையும் மீண்டும் முடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.