முகத்தை மூடும் தலைக்கவசம் அணியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவிப்பு 

முகத்தை மூடும் தலைக்கவசம் அணியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவிப்பு 

முகத்தை மூடும் தலைக்கவசம் அணியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2021 | 3:16 pm

Colombo (News 1st) முழுமையாக முகத்தை மூடும் வகையில் பாதுகாப்பான தலைக்கவசம் அணிந்து செல்லும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுமாறும் சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முழுமையாக முகத்தை மூடும் வகையிலான தலைக்கவசத்தை அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு எதிராக வெல்லவாய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபரான நாமல் பிரசங்க என்பரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் முன்னிலையில் இந்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பொலிஸாரால் முறைப்பாட்டாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த கட்டளைச்சட்டம் தற்போது வலுவிழந்துள்ளதாக சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

இதனால் குறித்த சட்டத்தின் கீழ் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த அறிவிப்பினால் தனது சேவை பெறுநரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே மன்றில் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்